Tuesday, March 3பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பிரிட்டனை விட்டு வெளியேறும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள், 2வது இடத்தில் சீனர்கள்!

லண்டன்: வேலை, கல்வி போன்ற காரணங்களுக்காக அதிக அளவில் வெளிநாட்டினர்கள் சென்று தங்கும் நாடாக நீண்டகாலமாக இருந்து வந்த பிரிட்டன், தற்போது வரலாறு காணாத அளவிற்கு வெளிநாட்டினர்கள் நாடு விட்டு வெளியேறும் நிலையை சந்தித்து வருகிறது. இந்த வெளியேறுபவர்களின் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில், அதற்கு அடுத்ததாக சீனர்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான விசா விதிகளின் தாக்கம்:
சமீப காலங்களில் பிரிட்டனில் வெளிநாட்டு குடியேற்றம் வேகமாக உயர்ந்தது. 39% வரை வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் வாய்ப்புகள், வேலை, வீடு உள்ளிட்ட துறைகளில் சிரமம் ஏற்பட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு, மாணவர் விசா, பணி விசா உள்ளிட்டவர்களுக்கு மிகக் கடுமையான புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இந்த நடவடிக்கை நேரடியாக நிகர குடியேற்றத்தில் (Net Migration) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

நிகர குடியேற்றம் கடுமையாக சரிவு:
பிரிட்டனின் தேசிய புள்ளிவிபர அலுவலகம் (ONS) வெளியிட்ட தரவுகளின்படி:
2023 ஆம் ஆண்டில் 9.44 லட்சம் இருந்த நிகர குடியேற்றம்,
2025 ஆம் ஆண்டில் 2.04 லட்சமாக குறைந்துள்ளது.
அதாவது இரண்டு ஆண்டுகளில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.

முதலிடத்தில் இந்தியர்கள்:
2025 ஜூன் மாதம் வரை பதிவான தரவு படி:
75,000 இந்தியர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் 45,000 பேர் மாணவர் விசா கொண்டவர்கள்,
22,000 பேர் பணி விசாவில் இருந்தவர்கள்,
அதன்பின் 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர்.

அதே நேரத்தில் விசா வழங்கப்படுவதிலும் பெரிய குறைவு ஏற்பட்டுள்ளது:
2023 செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில்,
நடப்பு ஆண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது.
குறிப்பாக, பணி விசா வெளியீடு 39% வரை சரிந்துள்ளது.

விசாக்கள் குறைந்தாலும், வேலை மற்றும் படிப்பு காரணங்களுக்காக 2025 ஜூன் வரை 1.5 லட்சம் பேர் பிரிட்டன் நோக்கி சென்றுள்ளனர் என்பதும் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து பிரிட்டனிற்கு செல்லும் குடியேற்றத்தில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

எச்சரிக்கை அறிக்கை:
வெளிநாட்டினர்களின் வெளியேற்றம், பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையிலான தற்போதைய அரசுக்கு அரசியல் ரீதியாக நிம்மதியாக இருந்தாலும், திறமையான மற்றும் தொழில்நுட்ப திறன்கள் கொண்ட நிபுணர்கள் வெளியேறுவது, பிரிட்டனின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக பொருளாதார மற்றும் குடியேற்ற மாற்றங்களுக்கிடையில், பிரிட்டனின் எதிர்கால உள்கட்டமைப்பு மற்றும் தொழில் சந்தை எப்படி மாறப் போகிறது என்பதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.