Tuesday, July 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

உருகும் பனிப்பாறைகள், கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

மனித வாழ்க்கைமுறையின் மாற்றத்தால் புவியின் சராசரி வெப்பநிலை இந்நூற்றாண்டின் இறுதியில் 2.7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என புவியியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது, உலக அளவில் பரவலாக உள்ள பனிப்பாறைகள் விரைவாக உருகி, கடல்நீர் மட்டம் அபாயகரமாக உயரக்கூடும் என்பதை காட்டுகிறது.

பத்து நாடுகளைச் சேர்ந்த 21 வல்லுநர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், எட்டு விதமான பனிப்பாறை மாதிரிகள் கொண்டு 2.75 லட்சம் பனிப்பாறைகளில் 2 லட்சம் பனிப்பாறைகளின் எதிர்காலம் கணிக்கப்பட்டது. இவர்களின் ஆய்வு முடிவுகள் “சயின்ஸ்” என்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் பனிப்பாறைகள் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிகவும் வேகமாக உருகி வருகின்றன. இந்த வேகம் இப்படியே தொடருமானால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், பூமியின் சராசரி வெப்பநிலை மேலும் 2.7°C அதிகரித்து, உலகின் பனிப் பாறைகளில் 76 சதவிகிதம் உருகி கடலில் தண்ணீராக கலந்து விடும். மீதியுள்ள 24 சதவிகித பனிப்பாறைகள் மட்டுமே எஞ்சி இருக்கும்.

கடல் மட்டம் உயர்வதால் பல இந்திய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன :

மும்பை மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரங்களில் ஒன்றாகும். 2100 ஆம் ஆண்டுக்குள் வோர்லி, கொலாபா மற்றும் நாரிமன் பாயிண்ட் போன்ற தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும். உலக வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால் மும்பையின் 50% க்கும் அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஹூக்ளி ஆற்றின் அருகே அமைந்துள்ள கொல்கத்தா, கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் சிறிதளவு உயர்வு கூட கடுமையான வெள்ளத்திற்கு வழிவகுக்கும், இது மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களை பாதிக்கும்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சென்னை 1.87 அடி நீரில் மூழ்கக்கூடும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன. நகரம் ஏற்கனவே தீவிர வானிலை நிகழ்வுகளை சந்தித்து வருகிறது, இதனால் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.

ஆந்திராவின் கடலோர நகரமான விசாகப்பட்டினத்தில் நீர் மட்டம் 1.77 அடி உயரக்கூடும், இதனால் அதன் துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகள் மூழ்கும் ஆபத்தில் உள்ளன.

கேரளாவின் மிகப்பெரிய துறைமுக நகரமான கொச்சி 2.32 அடி நீரில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை சீர்குலைக்கும்.

கடற்கரைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற கர்நாடக நகரம், மங்களூரு 1.87 அடி நீரில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை 2°C உயர்ந்தால், ஸ்காண்டிநேவிய நாடுகளில் (நோர்வே, சுவீடன், டென்மார்க்) உள்ள அனைத்து பனிப்பாறைகளும் முற்றிலுமாக உருகும். அதேபோல், வட அமெரிக்காவின் ராக்கி மலைகள், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ், ஐஸ்லாந்து, ஆகிய இடங்களில் உள்ள பனிப்பாறைகளில் 90 சதவிகிதம் வரை உருகும்.

தெற்காசியாவின் இமயமலை பனிப்பாறைகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, இந்துகுஷ் – இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் 75% வரை உருகும் என கூறப்படுகிறது. இமயமலையில் இருந்து உருவாகும் கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள், 2 பில்லியன் மக்களுக்கு நீர் மற்றும் உணவுக்கான ஆதாரமாக உள்ளன. இவை பாதிக்கப்படுவதால், பெரிய அளவில் மனித வாழ்வாதாரம் சிக்கலாகும்.

வெப்பநிலை 1.5°C-க்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, 55-60% பனிப்பாறைகள் உருகும் என்பது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து சரியான நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, பனிப்பாறைகள் உருகும் தாக்கம் பல நூற்றாண்டுகள் தொடரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.