
கர்நாடக மாநிலம் அனேகல் தாலுகாவின் எஸ்பிஐ வங்கி கிளையில், வாடிக்கையாளருடன் கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளர் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது. இந்த விவகாரத்திற்கு காரணமான மேலாளரை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் திடீர் நடவடிக்கையை கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டியுள்ளார். தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் அவர் தெரிவித்ததாவது: “அனேகல் தாலுகா சூரிய நகர் எஸ்பிஐ கிளையின் மேலாளர், கன்னடத்தில் பேச மறுத்து வாடிக்கையாளரை அலட்சியமாக அணுகியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு எஸ்பிஐ எடுத்துள்ள விரைவான நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாதெனவும், அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக முதல்வர் வலியுறுத்தினார். மேலும், உள்ளூர் மொழியில் பேச வங்கி ஊழியர்கள் முழுமையான முயற்சியையும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
“கர்நாடகாவில் பணியாற்றும் அனைத்து வங்கி ஊழியர்களும் கன்னடத்தில் பேசத் தேவையான முயற்சி எடுக்க வேண்டும். இதேபோல, இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களுக்கும், அவரவர்கள் பணியாற்றும் மாநிலங்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கவனத்தில் கொண்டு, மொழி உணர்திறன் பயிற்சிகளை மத்திய நிதி மற்றும் நிதி சேவைகள் துறை கட்டாயமாக்க வேண்டும்,” எனவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உள்ளூர் மொழிக்கு மரியாதை செய்வது, மக்களுக்கு மரியாதை கொடுப்பதற்கே சமமானது,” எனவும் அவர் தெரிவித்தார்.