Tuesday, July 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மியான்மரின் உள்நாட்டுப் போர், ராணுவத் நடத்திய விமான தாக்குதல், பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

தென்கிழக்காசிய நாடான மியான்மரில் (முந்தைய “பர்மா”) உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய மியான்மரில் உள்ள தபாயின் நகரைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நடந்த ராணுவ விமான தாக்குதலில், பள்ளி மாணவர்கள் 20 பேர் உட்பட பலர் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நிலவிவருகிறது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சி மூலம் ஜனநாயகத் தலைவர்களை பதவி நீக்கம் செய்த ராணுவம், அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அதன் பின்னர், மக்கள் எதிர்ப்பும், கிளர்ச்சிகர குழுக்களின் ஆயுதப் போரும் தொடர்ந்தே வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதிகளை தாக்கும் ராணுவம்:
மியான்மரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, மியான்மர் ராணுவம் விமானங்களில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இவர்களின் தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கமானதாயிருப்பதுடன், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 6,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு:
இந்தச் சூழ்நிலையிலேயே, மத்திய மியான்மரில் உள்ள தபாயின் நகரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராணுவத்தின் போர் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், பள்ளி கட்டடம் நேரடியாக இலக்காகி, பள்ளி மாணவர்களை கொன்றது, உலக சமூதாயத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கடுமையான தாக்குதலில், 20 மாணவர்கள் உடனடியாக உயிரிழந்தனர். மேலும், 2 ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர், இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மியான்மரில் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களை தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்து வருகின்றன. இந்த நிகழ்வு மீண்டும், மியான்மர் உள்நாட்டு போர் எவ்வளவு வன்முறையுடன் வளர்ந்து வருகிறது என்பதை வலியுறுத்துகிறது.

மியான்மரில் நிலவும் உள்நாட்டு போர் சூழ்நிலை, குழந்தைகள், மாணவர்கள் போன்ற பாதுகாப்பற்ற மக்களை நேரடியாக பாதிக்கும் அளவுக்கு தீவிரமாக இருப்பது உண்மை. இது குறித்து அந்த நாட்டின் அரசும், உலக நாடுகளும், உடனடி நடவடிக்கை எடுத்து இந்த வன்முறையை நிறுத்த வேண்டும் என்பதே மனித உரிமை அமைப்புகளின் வலியுறுத்தல்.