பெண்களுக்கெதிரான துன்பங்களை தடுக்கும் புதிய சட்ட மசோதா: முதல்வர் ஸ்டாலின் தாக்கல்.
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், துன்பத்தை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
கூட்டு பலாத்காரம் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல்: ஆயுள் தண்டனை.
ஆசிட் வீச்சு சம்பவங்கள்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.
பாலியல் வன்கொடுமை: குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.
மீண்டும் குற்றம் செய்தால்: பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் கைதானால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.
பெண்ணை பின்தொடரல்: 5 ஆண்டுகள் வரை சிறை, ஜாமினில் வெளியே வர முடியாது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தல்: 3 முதல் 5 ஆண்டுகள் சிறை.
நெருங்கிய உறவினர்கள் அல்லது அதிகாரம் மிக்கவரால் பலாத்காரம்: ஆயுள் தண்டனை.
இன்று சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடும் நடவடிக்கைகள்:
மசோதா தாக்கல் செய்த பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக விளங்குகிறது. பெண்களுக்கெதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறோம். குற்றம் செய்பவர்களிடம் எந்த தயவு தாட்சண்யமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.