திருவண்ணாமலை வ.உ.சி நகரில் ஏற்பட்ட மண்சரிவால், பாறைகள் உருண்டு வீடு புதையுண்டதில், 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தது. தேசிய பேரிடர் மீட்பு குழு 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கடுமையான முயற்சிகளின் பின்னர், அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் விவரம்:
- ராஜ்குமார் (32), மீனா (26)
- குழந்தைகள்: கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12).
சம்பவம் நடந்த போது, குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மலைப்பகுதியில் இருந்து மழைநீர் மற்றும் பாறைகள் உருண்டுவந்ததை கண்டு அச்சத்தில் வீடு புகுந்தபோது, மண் மற்றும் பாறைகள் வீடு முழுவதையும் மூடி விட்டன.
மண்சரிவு இடிபாடுகளுக்குள் இருந்து உடல்களை மீட்கும் போது அங்கு இருந்த அனைவரும் கண்கலங்கினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் கருத்து:
“மிகுந்த துயரமான சம்பவம் இது. எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று நம்பியிருந்தோம், ஆனால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது மிகுந்த வேதனை தருகிறது. வ.உ.சி நகரிலிருந்து மக்கள் வெளியே வர தயாராக இருந்தால், அரசு மாற்று இடத்துக்கு ஏற்பாடு செய்யும். நிலச்சரிவு பகுதியை ஆய்வு செய்ய ஐஐடி துறையினரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.”
தொடர்ந்து, நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.