
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பிணைப்பு வெறும் வரலாற்றுப் பிணைப்பு மட்டுமல்ல, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஒன்றிணைத்துள்ள ஒரு ஆழமான நாகரிக மற்றும் ஆன்மீகத் தொடர்ச்சி என்று துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இத்தகைய பரிமாற்றங்கள் இந்தியாவின் பகிரப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஆழப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை மேற்கோள் காட்டிப் பேசிய துணை குடியரசுத் தலைவர், காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா குறித்த கவிஞரின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்கு சார்ந்த முயற்சிகள் மூலம் பாரதியின் கனவு இன்று நனவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமம் போன்ற ஒரு சங்கமத்தின் மூலம், பிரதமர் நரேந்திர மோடி நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும், நமது அறிவுசார், ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் பெருமை உணர்வை ஏற்படுத்துவதற்கும், அத்துடன் தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கும் விதைகளை விதைத்துள்ளார் என்று கூறினார். காசியின் கரைகளில் தொடங்கி ராமேஸ்வரத்தின் கடற்கரைகளில் முடிவடையும் காசி தமிழ் சங்கமம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது என்றும், நமது மக்களையும், கலாச்சாரத்தையும், பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், காசிக்கும் தமிழுக்கும் இடையிலான தொடர்பு ஸ்ரீ ராமர் காலத்திலிருந்தே சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், சிவபெருமான் மீதான நம்பிக்கையும் பக்தியுமே தமிழ் மக்களின் முக்கிய கலாச்சாரம் என்றும் கூறினார். காசி தமிழ் சங்கமம் ஒவ்வொரு ஆண்டும் புகழ் பெற்று வருவதாகவும், ‘தமிழை கற்போம்’ என்ற இந்த ஆண்டுக்கான கருப்பொருளை அவர் எடுத்துரைத்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், காசிக்கும் தமிழ்நாட்டின் பல்வேறு புனித யாத்திரை தலங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைத்தார். பண்டைய தமிழ் இலக்கியங்களில் காசி குறிப்பிடப்பட்டிருப்பது குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். காசி மற்றும் ராமேஸ்வரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அவர் பாராட்டினார். திருவள்ளுவர் கலாச்சார மையங்களை அமைத்து, தமிழ் மொழியை சர்வதேச அரங்கில் பரப்ப முயற்சி எடுத்த பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
