
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் செயல்படும் வகையில் சீன அதிபர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக், குறும்பட வீடியோ, இசை, நடனம் போன்ற படைப்பாற்றல் உள்ளடக்கங்களை பகிரும் தளமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் இத்தளத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களுடன், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் சீன அரசின் கையில் செல்லும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அரசு தொடர்ந்து எச்சரித்தது.
இந்த சூழ்நிலையில், டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்பனை செய்யாவிட்டால், டிசம்பருக்குள் டிக்டாக் செயலியை தடை செய்யும் என அதிபர் டிரம்ப் முன்கூட்டியே எச்சரித்திருந்தார். “பயனர்களின் தரவு பாதுகாப்பு முக்கியம்” என்ற காரணத்தால், பைட்டான்ஸ் மீது கடும் அழுத்தம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டியது அவசியம் என வலியுறுத்தி வந்தார். இதற்காக அமெரிக்கா மற்றும் சீன தலைவர்கள் இடையே பலமுறை தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இத்தகவலை உறுதிப்படுத்திய டிரம்ப், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “டிக்டாக் இனி அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு, நம்பகமான பாதுகாப்பு கொள்கைகளுடன் செயல்படும். இந்த ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டுள்ளார். நானும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளேன். அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள டிக்டாக் குறித்து புதிய விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் படி, டிக்டாக் நிறுவனத்தின் பங்குகளில் 80 சதவீதம் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கும், 20 சதவீதம் அல்லது அதற்கு குறைவான பங்குகள் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் கூறுகையில், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தரவு பாதுகாப்பு போராட்டத்திற்கு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. சீனாவுடன் நீண்டகாலமாக நிலவி வந்த தொழில்நுட்ப மற்றும் தகவல் பாதுகாப்பு மோதலில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் மற்றும் டிஜிட்டல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.