Sunday, December 14பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது.

வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு பெருமளவு கச்சா எண்ணெய் டேங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது, வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் அழுத்த நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் இப்போதுதான் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு டேங்கர் கப்பலைக் கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய டேங்கர், உண்மையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்களில் மிகப்பெரியதாகும்,” எனக் கூறினார்.

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட வீடியோவில், பறிமுதல் செய்யப்பட்ட கப்பல் “வெனிசுவேலா மற்றும் ஈரானிலிருந்து தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறிய கப்பல்கள் செயலில் ஈடுபட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மேற்கொண்ட இந்த நடவடிக்கையை வெனிசுவேலா அரசு கடுமையாக கண்டித்துள்ளது. இது “சர்வதேச கடற்கொள்ளை” என வெனிசுவேலா குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக மதுரோ, “வெனிசுவேலா ஒருபோதும் எண்ணெய் காலனியாக மாறாது” என்று வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக மதுரோ அரசைக் தனிமைப்படுத்தும் முயற்சிகளை அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வெனிசுவேலாவின் மேல் சுமத்தி வந்த டிரம்ப் நிர்வாகம், அந்த நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைப் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் வெனிசுவேலா, “அமெரிக்கா எங்கள் இயற்கை வளங்களில் தலையிட முயற்சிக்கிறது” என குற்றம்சாட்டி வருகிறது. இந்த பறிமுதல் செய்தி வெளிவந்த சில மணி நேரங்களுக்குள், உலக சந்தையில் பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை குறுகிய கால விநியோகப் பயத்தால் சிறிதளவு உயர்ந்தது. இந்நிலையில், சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கை கூடுதல் ஆபத்துகளை உருவாக்கக்கூடும் என்றும், வெனிசுவேலாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா–வெனிசுவேலா உறவுகள் மீண்டும் பதட்டத்தை நோக்கி நகரும் நிலையிலான இந்த சம்பவம், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.