Monday, November 3பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

கப்பல்களை தாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஐ.நா. கண்டனம்!

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா மற்றும் கொலம்பியா வழியாக கடல் மார்க்கம் மூலம் அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இதனைத் தடுக்கப் போதை ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில், அமெரிக்க ராணுவம் கடந்த சில மாதங்களாக கரீபியன் மற்றும் பசிபிக் கடற்பகுதிகளில் இயங்கும் பல கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் இத்தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இருந்தாலும், உண்மையில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் மாதம் முதல் இதுவரை நடந்த தாக்குதல்களில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதன் பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. “போதை ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச கடல் சட்டங்களையும் மனித உரிமை ஒப்பந்தங்களையும் மீறி அமெரிக்கா மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெனிசுலா மற்றும் கொலம்பியா அரசுகள், தங்களது கடல் எல்லைகளில் அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தங்களது இறையாண்மையை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளன. சர்வதேச சமூகத்திலும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தன்னுடைய போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மனித உரிமை மரியாதையைப் பேணும் வகையில் இருக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.