Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

விசா முடிந்த பின் தங்க முடியாது: சர்வதேச மாணவர்களுக்கு பிரிட்டன் அரசின் எச்சரிக்கை!

பிரிட்டனில் கல்வி விசா முடிந்த பிறகும் நாட்டில் தங்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்வி நோக்கத்திற்காக பிரிட்டன் வந்து படித்து வரும் சர்வதேச மாணவர்களில், விசா காலாவதியாகும் தருவாயில் புகலிடம் கோரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அரசு தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, “இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மட்டும் 14,800 புகலிட விண்ணப்பங்கள்” பெறப்பட்டுள்ளன. இதில் “5,700 விண்ணப்பங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து” வந்தவையாகும்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா, வங்கதேசம், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் புகலிடம் கோரியுள்ளனர். இந்த நடைமுறை பெரும் அளவில் அதிகரித்து வருவதால், பிரிட்டன் அரசு கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அந்நாட்டின் உள்துறை துறை, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு நேரடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பி, விசா முடிவடைந்த பின் நாட்டில் தங்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் இதுகுறித்து கூறியதாவது:
“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மாணவர்கள் தங்கள் விசா முடியும் போதே புகலிடம் கோருகிறார்கள். இதனால் குடியேற்ற நிர்வாகத்தில் குழப்பங்கள் அதிகரிக்கின்றன. விசா முடிந்த பின்பும் புகலிடம் கோருவதால், பல ஆண்டுகள் நாட்டில் தங்கி விடுகிறார்கள். இது புகலிட விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் குடியேற்ற வசதிகளில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சினையை சரிசெய்வது எங்கள் கடமை. உங்களுக்கு இங்கிலாந்தில் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லையெனில், நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். வெளியேறாமல் இருந்தால், அரசு உங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும்,” என அவர் எச்சரித்தார்.