
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல, திட்டமிட்ட அரசியல் சதி எனக் கூறி, சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று த.வெ.க. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என, த.வெ.க. சார்பில் வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான சட்ட அணி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் பசுமை வழிசாலையில் வசிக்கும் நீதிபதி எம். தண்டபாணி அவர்களை நேற்று காலை நேரில் சந்தித்தது.
நீதிபதியை சந்தித்த அறிவழகன், “கரூரில் நடந்த சம்பவம் விபத்து போல தெரியவில்லை; அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்ட சதி போலவே உள்ளது. பிரசாரத்தின் போது கற்கள் வீசப்பட்டன, போலீசார் தடியடி நடத்தினர். எனவே, சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழு மூலம் சம்பவம் விசாரிக்கப்பட வேண்டும். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க நீதிமன்றம் உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி தண்டபாணி, “இச்சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர், மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிகாரப்பரப்பில் உள்ளதால், அங்கு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு இன்று மதியம் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
நீதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, த.வெ.க. சார்பில் இன்று காலை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் அமர்வு அமைப்பில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் வழக்கில் இன்று பிற்பகல் நடைபெறும் விசாரணை, சி.பி.ஐ. விசாரணை உத்தரவுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.