Friday, December 26பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு: H-1B விசா லாட்டரி முறை நீக்கம்.

அமெரிக்காவில் குடியேற்றம் மற்றும் வேலை விசா முறைகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர் மாற்றங்களை கொண்டு வருவதால், உலக நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன. அந்த வரிசையில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவில் தற்போது நடைமுறையில் உள்ள லாட்டரி முறையை முழுமையாக நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்காக செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

H-1B விசா என்றால் என்ன?
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக திறன் கொண்ட தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருவதற்காகவே இந்த H-1B விசா திட்டம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்த நிபுணர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர இந்த விசா பெரிதும் பயன்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஐடி நிபுணர்கள் இந்த H-1B விசா மூலமே அமெரிக்கா செல்கின்றனர்.

ஏன் லாட்டரி முறை?
தற்போது அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 65,000 ரெகுலர் H-1B விசாக்களும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு முடித்தவர்களுக்கு 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன. மொத்தமாக 85,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், விண்ணப்பங்கள் பெரும்பாலும் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் அடிப்படையிலான லாட்டரி முறையில் விசா ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

லாட்டரி முறைக்கு எதிர்ப்பு ஏன்?
இந்த லாட்டரி முறையை பல ஆண்டுகளாகவே அமெரிக்காவின் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தன. “திறமை, அனுபவம் எதையும் பார்க்காமல், வெறும் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விசா வழங்கப்படுவது லாஜிக்கே இல்லாத நடைமுறை” என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், H-1B விசா காரணமாக அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைகின்றன என்றும், சில நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரை வேலைக்கு அழைத்து வருவதற்காக இந்த முறையை தவறாக பயன்படுத்துகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனை முன்னாள் அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். H-1B விசாவில் மோசடி நடப்பதாகவும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது லாட்டரி முறை முற்றிலும் நீக்கப்படுகிறது.

இனி எப்படி விசா வழங்கப்படும்?
லாட்டரி முறைக்கு பதிலாக, இனி அதிக திறன், உயர் சம்பளம், முக்கிய துறைகளில் அனுபவம் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் புதிய மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரை அமெரிக்காவுக்கு அழைத்து வரும் நிறுவனங்களின் நடைமுறை தடுக்கப்படும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் H-1B விசா வழங்கும் முறை முழுமையாக மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஏன் பெரிய சிக்கல்?
H-1B விசாவை அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. குறிப்பாக நடுத்தர வருமானம் பெறும் ஐடி ஊழியர்கள், லாட்டரி முறையின் மூலம் அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு பெற்றிருந்தனர். ஆனால் இனி உயர் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் அதிக அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறும் சூழல் உருவாகுவதால், இந்தியாவில் இருந்து புதிதாக வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு விசா பெறுவது கடினமாகலாம் என கூறப்படுகிறது.

டிரம்ப் கொண்டுவந்த பிற மாற்றங்கள்:
விசா தொடர்பான மாற்றங்களில் டிரம்ப் அரசு ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், சில வகை விசாக்களின் கட்டணத்தை 4,500 டாலரிலிருந்து 100,000 டாலராக உயர்த்தியதாக அறிவித்தது. இது ஒரே முறையில் 2,122 சதவீத உயர்வு என்பதால், அதற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், செல்வந்தர்கள் எளிதாக அமெரிக்காவுக்கு குடியேறுவதற்காக “கோல்டன் கார்டு” என்ற புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், 1 மில்லியன் டாலர் செலுத்தினால், விரைவாக அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.