அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர், பிறப்பால் குடியுரிமை வழங்குவது தொடர்பான டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவை அமல்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றதன் பின்னர், தனது முதல் நாளிலேயே, ‘பிறப்பால் குடியுரிமை’ வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய உத்தரவை அறிவித்தார். இதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்க முடியாது. மேலும், தற்காலிகமாக வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களின் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, 22 அமெரிக்க மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் போதே, பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த இந்த உத்தரவை தடை செய்ய நீதிபதி ஜான் கோஹனூர் உத்தரவிட்டார். “இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது, இது என் மனதை குழப்புகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, டிரம்ப் உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை செய்ய, கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளை நாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.