
வீடு மற்றும் மனை வாங்கும் பொதுமக்கள் ஏமாறும் வகையில், “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்ற வாசகத்தை சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள் என்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதை தொடர்ந்தே, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) அந்த வாசகத்தை தடை செய்யும் வகையில் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனிமேல் வீடு அல்லது மனை விற்பனைக்கு விளம்பரம் செய்யும் போது, எந்த இடத்திலும் ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ (Terms and Conditions Apply) என்ற வாசகம் பயன்படுத்த அனுமதியில்லை என ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது. இந்த வார்த்தையை பல நிறுவனங்கள், பின் தொடரும் மறைமுக கட்டணங்களை நியாயப்படுத்த ஒரு தலையாய கருவியாக பயன்படுத்துவதாகும்.
இத்தரமான வழிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது, அபராதம் விதிப்பது, உரிமம் ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. மணிசங்கர் கூறியதாவது:
“வீடு மற்றும் மனை விற்பனையில் மறைமுகமாக கட்டணம் வசூலிக்கப்படும் சூழ்நிலையை கட்டுப்படுத்தவே, இந்த உத்தரவை ரியல் எஸ்டேட் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது வீடு வாங்கும் மக்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இனிமேல், உள்ளதை உள்ளபடி தெரிவிக்க முன்வர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது,” என்றார்.
இந்நிலையில், வீடு, மனை வாங்கும் பொதுமக்கள், விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம். வாடிக்கையாளர்களை முறையாக வழிநடத்தும் நிறுவனங்களின் மீதிலேயே நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும் என, வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.