
திருப்புவனத்தில் நடந்த அஜித்குமார் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை கடுமையாக சீர்குலைத்திருப்பதுடன், அரசு மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
சம்பவத்தின் பின்னணி பின்வருமாறு:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், நகைகள் திருடுபோனதாக வாடிக்கையாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து, அந்தத் தொடர்பில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்தக் காயங்களால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தமிழக அரசு பெரும் பதற்றத்திற்குள்ளானது. ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் கொதிப்புடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து அரசு பல்வேறு தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிவகங்கை போலீஸ் சூப்பிரண்ட் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டார். மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், வழக்கு சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு நிறுவனம்) விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
‘தனிப்படை’ காவலர்கள் மீது விரைவில் நடவடிக்கை
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக காவல்துறையின் ‘தனிப்படை’ என்ற அமைப்பு இருந்தது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரங்களிலும் போலீசார் சிலரை தனிப்படையாக வகுத்து, அந்தந்த உயர் அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வழக்கமாக இருந்தது. இத்தகைய தனிப்படை காவலர்கள், பல நேரங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அவர்கள் ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களில் பணியிலிருந்தாலும், நிஜத்தில் அவர்கள் முழுவதும் தங்களின் உயர் அதிகாரிகளின் பணிகளில் மட்டும் ஈடுபடுவது அன்றாட நடைமுறையாக இருந்தது.
டிஜிபி சங்கர் ஜிவால் கடும் நடவடிக்கை
இன்று வெளியான உத்தரவில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த அனைத்து ‘தனிப்படை’ காவல்துறையை உடனடியாக கலைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் அந்தந்த மாவட்ட மற்றும் நகர போலீஸ் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் எந்தவொரு குற்றவியல் விசாரணைக்காகவே தனிப்படையை அமைக்க வேண்டுமானாலும், அதற்கான சீரான செயல்முறை கடைபிடிக்கவேண்டும். விசாரணையின் தன்மையையும், அதன் அவசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு உரிய அறிவிப்பு பிறப்பித்த பின்னரே அந்த அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று டிஜிபி தெரிவித்தார்.