
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு:
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் (RTE Act, 2009) படி, 1 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய விரும்புவோர் தகுதித்தேர்வு (TET) எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆசிரியர் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் சங்கம் கண்டனம்:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்:
கல்வி உரிமைச் சட்டத்தில் இல்லாத பிரிவை உச்சநீதிமன்றம் தனது 142-வது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சேர்த்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று விதிப்பது தவறு. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் (மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்) இந்தச் சட்டத்தின் கீழ் வருவதில்லை. எனவே, இவர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் விதிக்கப்பட கூடாது. மாநில அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது தமிழக அரசு பள்ளி ஆசிரியர் நிலைமை:
அரசு தொடக்கப்பள்ளிகளில் – 62,979 ஆசிரியர்கள்
நடுநிலைப்பள்ளிகளில் – 49,547 ஆசிரியர்கள்
உயர்நிலைப்பள்ளிகளில் – 31,531 ஆசிரியர்கள்
மேல்நிலைப்பள்ளிகளில் – 82,033 ஆசிரியர்கள்
இவ்வாறு மொத்தம் 2,28,990 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,360 ஆசிரியர்கள் உள்ளனர். மொத்தமாக 3,05,350 அரசு ஆசிரியர்கள் மாநிலத்தில் பணிபுரிகின்றனர்.
எத்தனை பேருக்கு தகுதித்தேர்வு கட்டாயம்?
இதில் சுமார் 75,000 பேர் முதுநிலை ஆசிரியர்கள் (இவர்களுக்கு சட்டம் பொருந்தாது). அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெறுபவர்கள் – 50,000 பேர். ஏற்கனவே தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் – 35,000 பேர்.
இந்த மூன்று பிரிவினரையும் நீக்கினால், தற்போது சுமார் 1,45,000 அரசு பள்ளி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய நிலை உள்ளது.
தனியார் பள்ளி நிலைமை:
மேலும், தமிழகத்தில் 2.25 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் ஏற்கனவே தகுதித்தேர்வு வெற்றி பெற்றவர்கள் என 30% பேரை நீக்கினால், சுமார் 1.57 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தகுதித்தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை இணைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளதால், அரசு அடுத்தடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.