Monday, February 23பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தன, ஆனால் மாணவர்கள் பாதிப்பு!

அரையாண்டு விடுமுறை முடிவடைந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று (ஜனவரி 5) மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் தொடரும் போராட்டம் மாணவர்கள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பில் நடைபெற்று வரும் போராட்டம், பள்ளிகள் திறந்தாலும் நிறுத்தப்படாது என ஆசிரியர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர்.

SSTA சார்பில் கடந்த 10 நாட்களாக சென்னை சிவானந்தா சாலையில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிரியர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மனித சங்கிலி அமைத்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அரசு இதுவரை தங்களது கோரிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்பதே இந்த போராட்டம் நீடிக்கக் காரணம் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிகள் திறந்துள்ள நிலையிலும், போராட்டத்தை கைவிடும் எண்ணமில்லை என SSTA ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இனி சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், பெற்றோர்களும் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து SSTA பொதுச் செயலாளர் ஜே. ராபர்ட் கூறுகையில், “எங்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும். எங்களது அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும். அதுதான் ஓய்வூதியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல்வர் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படாத வரை, ஓய்வூதியப் பிரச்சினையும் தொடரும்” என தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 24ஆம் தேதி வரை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதன்பின் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில், மொத்தம் 10 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சனி, ஞாயிறு விடுமுறைகள் இணைந்து, ஜனவரி 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்கும் நாளில், 3ஆம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுதுபொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் தொடரும் போராட்டம் காரணமாக, முதல் நாளிலேயே வகுப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது மாணவர்கள் கல்வியில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் பள்ளிகள் திறந்து கல்வி நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் ஆசிரியர்களின் நீடிக்கும் போராட்டம் பள்ளி நிர்வாகங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு எப்போது தீர்வு காணும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலுப்பெற்று வருகிறது.