Sunday, January 25பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

விலங்குகளை கல்லாக மாற்றும் தான்சானியாவின் நேட்ரான் ஏரி!

கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ள நேட்ரான் ஏரி (Lake Natron) உலகின் மிகவும் மர்மமான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக காட்சி தரும் அழகிய ஏரிகள் உயிர்களுக்குத் தஞ்சம் அளிப்பவை. ஆனால், நேட்ரான் ஏரி அதற்கு முற்றிலும் மாறானது. இந்த ஏரியில் விழும் விலங்குகள், குறிப்பாக பறவைகள், கல்லைப் போன்ற உறைந்த எச்சங்களாக மாறி விடுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டுள்ளது.

கல்லாக மாற வைக்கும் ஏரியின் விஞ்ஞான காரணம்:
இந்த மாற்றம் மந்திரம் அல்லது புராண சம்பவம் அல்ல. ஏரியின் நீரில் காணப்படும் மிக அதிகமான காரத்தன்மை (high alkalinity) மற்றும் சோடியம் கார்பனேட் (Sodium Carbonate) எனும் உப்பு காரணமாகும். ஏரியில் விழும் உயிரினங்களின் உடல்களில் உள்ள நீரும் கொழுப்பும் வேகமாக உறிஞ்சப்பட்டு, அவற்றின் உடல் உலர்ந்து மிகக் கடினமான கல் போன்ற வடிவமாக மாறுகிறது. குறிப்பாக பறவைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. மிகவும் அதிக pH மதிப்பு கொண்ட இந்த உப்புத்தன்மை உடலின் திசுக்களை விரைவாக வாடச் செய்து, உடலில் கால்சியம் படிவம் ஏற்பட்டு, சிலையின் வடிவைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

எரிமலை அடிவாரத்தில் அமைந்த கொடிய சிவப்பு ஏரி:
நேட்ரான் ஏரி, தான்சானியாவின் அருஷா பகுதியில் கென்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கின் (East African Rift Valley) கிழக்கு பிரிவில், தற்போது செயலில் உள்ள எரிமலை ‘ஓல்டொயின்யோ லெங்காய்’ (Ol Doinyo Lengai) அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஏரியின் பெயர் நேட்ரான் எனப்படும் உலர்ந்த உப்பு படிகங்களிலிருந்து வந்தது. ஏரியின் பரப்பளவு சுமார் 150 சதுர கிலோமீட்டர் (58 சதுர மைல்) மற்றும் அதிகபட்ச ஆழம் மூன்று மீட்டர் மட்டுமே. இது கருஞ்சிவப்பு – சிவப்பு நிறத்தில் பதட்டமான தோற்றத்தை அளிக்கிறது. இதனால் ‘தான்சானியாவின் கொடிய சிவப்பு ஏரி’ (Deadly Red Lake) என்ற பெயரால் பிரபலமாகியுள்ளது.

உயிர் வாழ்வை காக்கும் அதிசய உயிரினங்கள்:
இத்தகைய கொடிய சூழலில் கூட, சில உயிரினங்கள் தங்களது தனித்துவமான மாற்றங்களின் மூலம் உயிர் வாழ்கின்றன. அவற்றில் முக்கியமானவை லெஸ்ஸர் ஃபிளமிங்கோ (Lesser Flamingo) எனப்படும் பறவைகள். ஏரியில் செழித்து வளரும் நீல-பச்சை ஆல்கே மற்றும் சயனோ பாக்டீரியாக்கள் இவற்றின் உணவாக விளங்குகின்றன. இந்த பறவைகளின் உடலில் உள்ள சிறப்பு உப்பு சுரப்பிகள் அதிக உப்பை வெளியேற்ற உதவுகின்றன. இந்த ஏரி இவற்றின் முக்கிய இனப்பெருக்க மையமாக விளங்குவதால், கோடிக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் இங்கு கூடுகளை அமைக்கின்றன.

மனிதர்களுக்கும் ஆபத்தான ஏரி:
ஏரியின் நீரில் உள்ள காஸ்டிக் தன்மை மனிதர்களின் தோல் மற்றும் கண்களில் கடுமையான எரிச்சல் மற்றும் தீக்காயம் ஏற்படுத்தக்கூடியது. மேலும், ஏரியின் நீரின் வெப்பநிலை 38°C (100°F) வரை உயர்வதால், இது மிகவும் ஆபத்தான ஏரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பார்வையிட வேண்டிய நேரம்:
நேட்ரான் ஏரியை பார்வையிட சிறந்த நேரம்
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை – குளிரான காலமாக இருப்பதால் பாதுகாப்பானது.
ஃபிளமிங்கோ இனப்பெருக்கக் காலம் செப்டம்பர் முதல் மார்ச் வரை – பறவைகளின் அற்புதக் காட்சி காணலாம்.

மனதை பதறும் இயற்கை அதிசயம்:
உயிர்களை கல்லாக மாற்றும் இந்த நேட்ரான் ஏரி, மரணத்தை வரவேற்கும் ஏரி என்ற பயங்கரமான புகழைப் பெற்றாலும், அதே நேரத்தில் அதிசயமான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இயற்கையின் ஆழமான மர்மங்களை மனிதர்களுக்கு நினைவூட்டும் ஒரு அதிசய இடமாகும்.