
லண்டன்: இலங்கைத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இளம் கவிஞர் வித்யன் ரவீந்திரன் (Vidyan Ravinthiran), பிரித்தானியாவின் கவிதை உலகில் மிக உயர்ந்த பெருமை வாய்ந்த “Forward Prize 2025” என்ற விருதைப் பெற்றுள்ளார்.
வித்யன் ரவீந்திரன், இலங்கைத் தமிழ் தம்பதியருக்கு பிறந்தவர். அவர் பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட அவர், தனது படைப்பாற்றலால் உலக இலக்கிய வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.
இவ்வாண்டு “Forward Prize for Poetry” விருது, அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘அவித்யா’ (Avadhya) நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல், மனிதனின் உள்ளார்ந்த அடையாளம், புலம்பெயர்ந்தோரின் உணர்வுகள், மற்றும் மூன்று வெவ்வேறு நாடுகளில் பரவியுள்ள கலாச்சார அனுபவங்களை வெளிப்படுத்தும் சிறப்பான படைப்பாகப் பாராட்டப்பட்டுள்ளது.
நூலில் இடம்பெறும் கவிதைகள், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களும், உலகளாவிய புலம்பெயர்ந்தோர் சமூகம் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களும் இணைந்த சிந்தனைகளின் பிரதிபலிப்பாக உள்ளன. இதன் மூலம், கவிஞர் தனது வாழ்க்கை, குடும்பம் மற்றும் வேர்களின் ஆழமான தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
விசேஷமாக, இந்த ஆண்டில் Forward Prize விருது இரு கவிஞர்களுக்கு இணைந்து வழங்கப்பட்டிருக்கிறது. வித்யன் ரவீந்திரனுடன் சேர்ந்து, கனடாவை சேர்ந்த கவிஞர் கரன் சோலீ (Karen Solie) தனது ‘Wellwater’ என்ற கவிதைத் தொகுப்புக்காகவும் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இந்த சாதனை குறித்து இலக்கிய வட்டாரங்கள் பெருமை தெரிவித்துள்ளன. ஒரு இலங்கைத் தமிழ் வம்சாவளியிலிருந்து வந்த கவிஞர், ஆங்கிலக் கவிதை உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றைப் பெற்றிருப்பது, உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. வித்யன் ரவீந்திரனின் இந்த சாதனை, புலம்பெயர்ந்த தமிழர்களின் திறமை, சிந்தனை ஆழம் மற்றும் கலாச்சார அடையாளத்தின் வலிமையை உலகத்திற்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
