Tuesday, December 23பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து செவிலியர்கள் 5வது நாளாக போராட்டம்.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு தொகுப்பூதிய செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், செவிலியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 18ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமாருடன் சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்தியபோதும், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, போலீசார் அனுமதித்த நேரத்தை தாண்டியும் உண்ணாவிரதம் தொடர்ந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்த போலீசார், அவர்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர்.

அங்கும் இரவு நேரத்தில் போராட்டம் தொடரப்பட்டதால், செவிலியர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாலையில் விடுவிக்கப்பட்ட செவிலியர்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டம் ஐந்தாவது நாளாக நீடித்துள்ள நிலையில், நேற்று அமைச்சர் சுப்பிரமணியன், செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்துடன், பிற செவிலியர் சங்கங்களும் கலந்து கொண்டன. அமைச்சரின் அறிவிப்பை சில சங்கங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் அதனை ஏற்க மறுத்தனர். நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரின் விளக்கம்:
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “நிரந்தர பணியாளர்களைப் போல, தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க அரசாணை வெளியிடப்படும். கடந்த 2014–15ம் ஆண்டுகளில் தற்காலிக செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் பணி செய்த பின் காலி பணியிடம் ஏற்பட்டால் பணி நிரந்தரம் செய்யப்படும் என கூறப்பட்ட முறை தவறானது என்றாலும், இதுவரை 7,000க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்ற பின், 3,614 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.

மேலும், தற்போது 8,322 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 169 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் தயாராகி வருவதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–2 பதவி உயர்வு 266 பேருக்கும், செவிலியர் போதகர் நிலை–2 பதவி உயர்வு 140 பேருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 148 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவை உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், 723 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். மீதமுள்ள 7,599 பேருக்கும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப படிப்படியாக பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் விளக்கம் அளித்தார்.

“போராட்டம் தொடரும்” – சங்கம் அறிவிப்பு:
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின், “அமைச்சருடன் இரண்டாவது முறையாகவும், செயலருடன் ஒருமுறையும் பேச்சு நடத்தியபோதும், எங்கள் அடிப்படை கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எட்டு ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் அதிக வேலை செய்து வருகிறோம். 723 பேரை மட்டும் பணி நிரந்தரம் செய்து, மற்றவர்களை படிப்படியாக செய்வோம் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது. செவிலியர்களின் போராட்டத்திற்கு டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்,” என்று தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பையும், சங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் தொடர்ந்து, அரசு–செவிலியர்கள் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டம் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.