Thursday, December 26பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சிரியாவின் இடைக்கால பிரதமர் : இன்ஜினியர் முஹமது அல் – பஷீர்!

கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தால் சிரியாவில் அதிபர் பஷர் அல் – ஆசாத் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக இன்ஜினியர் முஹமது அல் – பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

13 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போரின் உச்சகட்டமாக, ஹெச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி முதல் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி, அலெப்பா, ஹாம்ஸ், டாரா, குனேத்ரா, சுவேடா மற்றும் டமாஸ்கஸ் நகரங்களை கைப்பற்றினர். இதையடுத்து, அதிபர் பஷர் அல் – ஆசாத், பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த 8ம் தேதி நாட்டைவிட்டு வெளியேறி, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்து உள்ளார்.

இந்த சூழலில், சிரியாவின் இடைக்கால பிரதமராக இன்ஜினியர் முஹமது அல் – பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அந்நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

சிரியாவில் இருந்த 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துஉள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: “சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் சைதா ஜைனாப் நகரில் சிக்கித் தவித்த ஜம்மு – – காஷ்மீரைச் சேர்ந்த 44 யாத்ரீகர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக லெபனான் சென்றடைந்தனர். அங்கிருந்து நாடு திரும்புவர். டமாஸ்கஸ், பெய்ரூட்டில் உள்ள இந்திய துாதரகங்கள் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தன.”