
தமிழகத்தில் இயங்கும் ஸ்பின்னிங் மில்கள் வணிக நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளன. அதன் முக்கியக் காரணங்களில் ஒன்றாக, இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India – CCI) தமிழகத்திற்கு பஞ்சு விநியோகம் செய்ய மறுப்பது என ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கடும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்களில், 40 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் மையமாக திகழ்கின்றன. ஆனால் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி முழுமையான தேவைச்சுமையை சமாளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, சில மில்கள் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) பெரிதும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, இந்திய பருத்தி கழகம், அதிக விலையில் பருத்தி கொள்முதல் செய்து, அதை கிடங்குகளில் வைத்து விற்பனை செய்யும் நடைமுறையை பின்பற்றுகிறது. ஆனால் இந்த பருத்தி விற்பனை, தமிழகத்தில் மிகக் குறைவாக தான் நடைபெறுகிறது. எதிர்பார்க்கப்பட்ட அளவில் விற்பனை செய்யாத இந்திய பருத்தி கழகம், தமிழகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழகத்தின் பஞ்சுத் தேவையை பூர்த்தி செய்ய, ஸ்பின்னிங் மில்கள் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்கி வருகின்றன. இதனால், ஒரு கண்டி (Candy) பஞ்சுக்கு கூடுதலாக ₹2,000 செலவாகிறது.
மேலும், இந்திய பருத்தி கழகத்தில் முன்பதிவு செய்யும் போது 10% தொகையை முன் பணமாக செலுத்த வேண்டும். விற்பனைக்கும் முன், 24 மணி நேரத்துக்குள் மீதித் தொகையான 90% பணமும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நெருக்கடி அளிக்கின்றன.
பஞ்சு பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழகத்தில், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இந்திய பருத்தி கழகம் மிகப்பெரிய கிடங்குகளை அமைத்து, அதிக அளவில் பஞ்சு விற்பனை செய்ய வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.