
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காரணங்களை கண்டறிந்து, குற்றப்பொறுப்பை நிர்ணயிக்க தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
இந்த ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை பணிகள் நேற்று (செப். 28) தொடங்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் அவர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மாலை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு நேரில் சென்று சூழ்நிலையை ஆராய்ந்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் நேரடி கேள்விகள் எழுப்பி, சம்பவம் நடந்த விதம் குறித்த முக்கிய தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களையும் சந்தித்து விசாரித்தனர்.
இன்று (செப். 29) இரண்டாவது நாளாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை முன்னெடுத்து வருகிறார். சம்பவம் நடந்த இடத்தையும் மருத்துவமனையையும் மீண்டும் ஆய்வு செய்த அவர், உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களிடம் பேசி துயரத்தை பகிர்ந்து கொண்டு முக்கியமான தகவல்களைப் பதிவுசெய்தார்.
இந்த பெரும் விபத்துக்கான காவல் துறை விசாரணை தொடர்பாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முழு உண்மை வெளிச்சம் பார்க்கும் வரை, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெறவுள்ளது.