Wednesday, August 20பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை படுகொலை செய்த பிரதான குற்றவாளி மணிகண்டன், என்கவுன்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையிலும் பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக் குளம் பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோப்பொன்றை அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் வைத்துள்ளார். இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் (25) ஆகியோர் பணி செய்துவருகின்றனர். இவர்களுடன், மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் (30) சமீபத்தில் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார். முந்தைய இரவில் மது அருந்திய பின்னர், தந்தை, மகன்கள் ஆகிய மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அரிவாளுடன் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை பண்ணை மேலாளர் ரங்கசாமி, உடனடியாக குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில், குடிமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் (57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜா, ரோந்து ஜீப்பில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மணிகண்டன், தந்தை மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் ஆகியோர் சேர்ந்துகொண்டு போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருட்டாக இருந்ததனால், எஸ்.ஐ. சண்முகவேல் தப்பிக்க முயன்றபோதும், மணிகண்டன் அவரை அரிவாளால் தலையும் கழுத்தும் பகுதியில் வெட்டி கொலை செய்தார். சம்பவம் நேரத்தில் பண்ணை மேலாளர் ரங்கசாமியும் போலீஸ்காரர் அழகுராஜாவும் தப்பிக்க முடிந்தது. இந்த கொலைக்கு பிறகு, மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஆனால், மணிகண்டன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் இன்று 7.8.2025 (வியாழக்கிழமை) காலை, சிக்கனூத்து கிராமத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனை பிடிக்க போலீசார் முயன்றபோது, அவர் மீண்டும் போலீசாரை தாக்கி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய பதிலடியில், துப்பாக்கிச்சூட்டில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுன்டர் சம்பவம் சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், பிரபல குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிகண்டனின் உடல், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மணிகண்டன் தாக்கியதில் காயமடைந்த குடிமங்கலம் எஸ்.ஐ. சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சட்ட மற்றும் ஒழுங்கு சம்பவங்களில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது என்றே கூறவேண்டும்.