Tuesday, June 16பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஸ்லோவாக்கியா தனது உயரிய அரசு விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது

ஸ்லோவாக்கியாவின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, அந்நாட்டின் உயரிய அரசு விருதான “ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ்” (The Order of the White Double Cross, First Class) விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். இந்தச் சிறப்பான கௌரவத்திற்காக ஸ்லோவாக்கிய அதிபர், அரசு மற்றும் மக்களுக்குப் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இவ்விருதை ஏற்றுக்கொண்ட அவர், இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும், இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையிலான நீடித்த நட்புறவுக்கும் அளிக்கப்பட்ட கௌரவம் என்று குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா மக்களை இணைக்கும் அன்பு, நம்பிக்கை மற்றும் பாசத்தின் அடையாளமாக இவ்விருதைக் குறிப்பிட்ட பிரதமர், இரு நாட்டு மக்களும் தங்கள் சிறப்பான நட்புறவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள இவ்விருது வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்லோவாக்கியா சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்; இதன் மூலம் இருதரப்பு உறவுகளில் இப்பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 33-வது சர்வதேச விருது இதுவாகும்.