Sunday, September 27பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

‘தொடர்ச்சியாக பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடு’: ஐ.நா. பொதுச் சபையில் அமைச்சர் ஜெய்சங்கர்!

பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை (செப். 26) கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் பேசிய ஜெய்சங்கர், அதற்கு முந்தைய நாள் அதே சபையில் உண்மைகளைத் திரித்துக் கூறிய பாகிஸ்தானை “தொடர்ச்சியாக பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடு” என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் மீதான இந்தியாவின் “சகிப்புத்தன்மையற்ற” (zero-tolerance) கொள்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், பாகிஸ்தானின் “அரசு ஆதரவு” பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அரசுகள் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் நிதி சார்ந்த அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அவற்றை முறியடிக்க வேண்டும் என்று ஐ.நா. உறுப்பினர்கள் நாடுகளை ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

முந்தைய நாள் பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், “நேற்று, பயங்கரவாதத்தில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு தரப்பு, இந்தச் சபையில் உண்மைகளைத் திரித்துக் கூறியது,” என்று கூறினார். “பயங்கரவாதத்தை இயல்பான ஒன்றாகக் காட்டவும், அதன் விளைவுகளிலிருந்து விலக்கு கோரவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவை எடுபடாது,” என்று அவர் கூறினார்.

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், “பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை பயன்படுத்தப்படும். நட்பும் நல்லெண்ணமும் பயங்கரவாதத்துடன் இணைந்து இருக்க முடியாது; அதன் அடிப்படையில் அமைந்த புரிதல்கள் இயல்பாகவே கேள்விக்குள்ளாக்கப்படும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் தரப்புதான் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை (செப். 25), பாகிஸ்தானில் இந்திய அரசு எப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தும் என்று கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவருக்கு ஜெய்சங்கர் காட்டமாகப் பதிலளித்தார். “ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது?” என்று ஜெய்சங்கர் பதிலளித்தார். அவரது பதிலைத் தொடர்ந்து, அந்தப் பத்திரிகையாளர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையிலேயே ஜெய்சங்கரும் மற்ற பிரதிநிதிகளும் அந்த அறையை விட்டு வெளியேறினர்.

கடந்த காலங்களில் இந்தியாவில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த அல்லது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-அன்று, ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலா நகரமான பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.