Friday, December 26பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

வடகொரியாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கிக் கப்பல்.

அணுசக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கிக் கப்பலை வடகொரியா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இந்த முன்னேற்றத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு என்பது மிக உயர்ந்த தொழில்நுட்ப திறன் தேவைப்படும் ஒரு சவாலான பணியாகும். இதுவரை இந்தியா உட்பட அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செய்துள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்திருப்பது உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படையின் “வெர்ஜீனியா” வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு நிகரான அளவில் இந்த புதிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 8,700 டன் எடையைக் கொண்டதாக மதிப்பிடப்படும் இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், இன்னும் அதிகாரப்பூர்வமாக கடலில் இறக்கப்படவில்லை. இருப்பினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த கப்பலின் உட்புற கட்டுமானத்தை நேரில் ஆய்வு செய்த புகைப்படங்களை அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இது, வடகொரியா இந்த திட்டத்தை மிக முக்கியமானதாக கருதுவதை வெளிப்படுத்துகிறது.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது கிம் ஜாங் உன்னின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது. இதுகுறித்து அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆளும் கட்சி மாநாட்டிலேயே முதன்முறையாக அறிவித்திருந்தார். அதேசமயம், அமெரிக்காவின் அனுமதியுடன் தென்கொரியா சொந்தமாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியதைத் தொடர்ந்து, வடகொரியா இந்த திட்டத்தை விரைவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தன் நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக கிம் ஜாங் உன் கருதுவதாக கூறப்படுகிறது.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பல முக்கியமான நன்மைகள் உள்ளன. டீசல் இயந்திரங்களால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் போல அடிக்கடி மேற்பரப்புக்கு வந்து எரிபொருள் அல்லது பேட்டரி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. போதுமான உணவு மற்றும் தேவையான பொருட்கள் இருந்தால், பல ஆண்டுகள் வரை எந்த தடையுமின்றி நீருக்கடியில் செயல்பட முடியும். மேலும், இவ்வகை நீர்மூழ்கி கப்பல்கள் மிக வேகமாகவும், அமைதியாகவும் இயங்கும் தன்மையைக் கொண்டதால், எதிரி நாடுகள் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது.

இந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வடகொரியாவின் தற்காப்பு கொள்கையில் மிக முக்கிய பங்காற்றும் என்று கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக வலிமையான தாக்குதல் திறன் தான் தேசிய பாதுகாப்புக்கான சிறந்த கேடயம்” என கிம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவது, வடகொரியாவின் பாதுகாப்பை மீறும் செயல் என்றும், அதனை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தலாகவே பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்கொரியாவிடம் ஏற்கனவே வடகொரியாவை விட மேம்பட்ட ஆயுத அமைப்புகளும், நவீன கடற்படை கப்பல்களும் உள்ளன. இரு நாடுகளும் தொடர்ந்து சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்கி வரும் சூழ்நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம், எதிர்வரும் நாட்களில் உலக அரசியல் மேடையில் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.