Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணங்கள் நிர்ணயம்!

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்கான (NRI) இடங்களுக்கு தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

4.35 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம்

தற்போது தமிழ்நாட்டில், சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,450 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் உள்ளன. இதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் NRI ஒதுக்கீடு இடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களுக்கு இந்த ஆண்டுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, நீதிபதி ஆர். பொங்கியப்பன் தலைமையில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ப. செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி, டாக்டர் ஆர். பாலசந்திரன், டாக்டர் கே. ஆனந்தகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுயநிதி கல்லூரிகளில் கட்டண விவரம்
  • அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு:
    ஆண்டுக்கு ₹4.35 லட்சம் முதல் ₹4.50 லட்சம் வரை
  • நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு:
    ஆண்டுக்கு ₹15 லட்சம்
  • NRI ஒதுக்கீடு இடங்களுக்கு:
    ஆண்டுக்கு ₹27 லட்சம்

தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் கட்டண விவரம்
  • அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு:
    ஆண்டுக்கு ₹5.40 லட்சம்
  • நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு:
    ஆண்டுக்கு ₹16.20 லட்சம்
  • NRI ஒதுக்கீட்டிற்கு:
    ஆண்டுக்கு ₹30 லட்சம்

மேலும், மேம்பாட்டு நிதி என்னும் பெயரில் கூடுதல் ₹60,000 வரை தனியாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் இந்த தொகையிலேயே அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை பெற முடியாது; கூடுதல் கட்டணங்களுக்கு தடை

மாணவர்களிடம் நன்கொடை அல்லது கூடுதல் கட்டணங்களை எந்தவிதத்திலும் பெறக் கூடாது என்றும், இது சட்டத்திற்கு விரோதமானது எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் மட்டும் தனியாக வசூலிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனிக்க வேண்டிய விடயம்

மருத்துவக் கல்வி இயக்குநரகம், மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கல்லூரிகளை தேர்வு செய்யும் முன், அந்தக் கல்லூரியின் கட்டண விவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு, சிந்தித்து முடிவு எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.