Tuesday, July 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஜூலை 1 முதல் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்!

இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. புதிய விதிகளின்படி, IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயணிகள் உண்மையில் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நபர்களே என உறுதி செய்வதற்கும், பாதுகாப்பு காரணங்களுக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தவறான முன்பதிவுகளைத் தடுக்கவும், பயணிகள் நலனுக்காக புதிய வசதிகளை வழங்கும் நோக்கத்திலும் இது அமல்படுத்தப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஜூலை 1 முதல்:
    • IRCTC இணையதளம், செயலி வழியாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, பயனர்கள் IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது கட்டாயம்.
    • முதலாவது 30 நிமிடங்கள் – தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்திலிருந்து முகவர்கள் (Agents) டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
      • ஏ.சி வகுப்புகள் – முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும்; முகவர்களுக்கு அனுமதி 10.30 மணிக்குப் பிறகு.
      • ஏ.சி அல்லாத வகுப்புகள் – பயணிகள் முன்பதிவு 11 மணிக்கு, முகவர்கள் 11.30 மணிக்குப் பிறகு.
  • ஜூலை 15 முதல்:
    • தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் ஆதார் எண் உறுதிப்படுத்தல் கட்டாயமாகிறது.
    • இந்த நடைமுறை IRCTC இணையதளம், பயணிகள் முன்பதிவு மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக அமல்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கைகள், முன்பதிவின் நேர்மையும், பயணிகள் நலனும் உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், முறைகேடுகளைத் தவிர்த்து, சாதாரண பயணிகளுக்கே தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்து மண்டல ரயில்வே அலுவலகங்களும் இந்த மாற்றங்களுக்கு தேவையான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பயணிகள் தங்களது ஆதார் எண்ணை தாங்கள் பயன்படுத்தும் IRCTC கணக்குடன் விரைவில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.