
தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாகவே மே 24ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் தினசரி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் கல்லார்குட்டி, மலன்காரா, பொன்முடி மற்றும் பாம்பலா ஆகிய 4 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. மூவன்புலா ஆறு தற்போது அபாய நிலையில் உள்ளது.
கனமழையால் இடுக்கியில் 103 வீடுகள் சேதமடைந்துள்ளன, 9 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே 10 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. எர்ணாகுளம் திருமராடி பகுதியில் வசித்து வந்த அன்னகுட்டி சாக்கோ (வயது 80) என்பவர் மரம் விழுந்தும், ஆலப்புழா அருகே புன்னம்பராவில் ஜேம்ஸ் (வயது 65) என்பவர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர்.
இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட இடங்களில் கனமழை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
நடப்பிலுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, அனைத்து துறைகளின் அதிகாரிகளும் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.