
கேரள மாநிலத்தில் மூன்று புலிகள் உயிரிழந்ததற்கான காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையில், ஆண் புலியின் தாக்குதலே இதற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில், 45 வயதான ராதா என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து, வயநாடு வைதிரி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அழுகிய நிலையில், ஒரு புலியின் உடல் மீட்கப்பட்டது. அது ராதாவை கொன்ற புலி என அடையாளம் காணப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மேலும் மூன்று புலிகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. வயநாடு குறிச்சியாடு வனப்பகுதியில் இரண்டு புலிகளின் உடல்கள் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. அருகில் உள்ள காபி தோட்டத்தில் மூன்றாவது புலியின் உடலும் மீட்கப்பட்டது.
இந்த தொடர்ச்சியான உயிரிழப்புகளுக்கான காரணத்தை கண்டறிய, வனத்துறை அமைச்சர் ஏ.கே. சுசீந்திரன் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டார். வடக்கு மண்டல தலைமை வனக்காவலர் கே.எஸ். தீபா தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
புலனாய்வுக் குழுவின் விசாரணை
விசாரணையின் மூலம், உயிரிழந்த மூன்று புலிகளும் குட்டிப் புலிகள் என்பதும், அவற்றை ஒரு ஆண் புலி தாக்கி கொன்றிருப்பது உறுதியானது. பெண் புலிகள், இனச்சேர்க்கை காலத்தில் குட்டிகளைப் பாதுகாக்க ஆண் புலிகளிலிருந்து விலகிச் செல்லும். இதனால், சில நேரங்களில் ஆண் புலிகள் கோபமடைந்து குட்டிகளை தாக்கும் சூழல் உருவாகிறது. வயநாட்டில் நிகழ்ந்த இந்த மரணங்கள் அதற்கே ஒரு எடுத்துக்காட்டு.
மூன்று குட்டிகளின் உடல்களிலும் கழுத்து மற்றும் உடலில் பல காயங்கள் காணப்பட்டன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மற்றொரு புலியின் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரணமடைந்த ஆண் புலியின் முதுகெலும்பு முறிந்து, முதுகுத் தண்டு துண்டிக்கப்பட்டது. பெண் புலி மரணத்திற்கு காரணம், மண்டை எலும்பு முறிவு மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் ஆகும். இரண்டுமே மற்றொரு புலியின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விசாரணையின் மூலம், மூன்று புலிகள் மரணத்திற்கான மர்மம் நீங்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.