Monday, January 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர் சங்கங்களுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கக் கூட்டமைப்புகளுடன், தமிழக அரசு இன்று ஜனவரி 2, 2026 காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தாலும், அதிலுள்ள பரிந்துரைகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு, பேடி குழு அறிக்கை தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, முதல்வருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர், ஓய்வூதியம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ கூட்டமைப்புகள் டிசம்பர் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்கு முன், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அந்தக் கூட்டமைப்புகள் உறுதியாக அறிவித்திருந்தன.

இதனிடையே, தமிழக அரசு எடுத்துள்ள ஓய்வூதியத் தொடர்பான முடிவுகளை, போராட்டம் அறிவித்துள்ள கூட்டமைப்புகளுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், அமைச்சர்கள் குழு சங்கத் தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே சமரசத் தீர்வு எட்டப்படுமா என்பதைக் கவனித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் இந்த பேச்சுவார்த்தையின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.