
மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்யும் கடைசி தேதி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை வருமானவரி துறை நேற்று நள்ளிரவு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது. அதில், நேற்று (செப்டம்பர் 15) பல வரியளிப்போர் ITR தாக்கல் செய்யும் போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், வரி செலுத்துவோருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர், அது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு நாள் நீட்டித்து, இன்று (செப்டம்பர் 16) வரை ITR தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருமானவரி துறை தெரிவித்ததாவது:
“மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான வருமானவரி அறிக்கை தாக்கல் செய்பவர்கள் 7 கோடியே மேற்பட்டவர்களாக உள்ளனர். பெரும்பாலானோர் ஏற்கனவே தங்களது வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்து விட்டனர். ஆனால் சிலருக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சிரமமின்றி தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கும் விதமாக கடைசி தேதி ஒரு நாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதனால், இன்னும் தாக்கல் செய்யாதவர்களுக்கு இன்று வரை ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வரி ஆலோசகர்கள் மற்றும் வியாபாரிகள் இதை வரவேற்று, கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.