
காசா நகரத்தை விட்டு வெளியேற பாலஸ்தீனியர்கள் பயன்படுத்தக்கூடிய பாதையைத் 48 மணி நேரம் கூடுதளாக திறப்பதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று கூறியது, ஏனெனில் நகரத்தில் பொதுமக்களை வெளியேற்றவும் ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளை எதிர்கொள்ளவும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு, 2023 ஆம் ஆண்டு திடீர் ராணுவத் தாக்குதலை இஸ்ரேலின் மீது நடத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இஸ்ரேல், காசா மீது விமானத் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் மதிப்பீட்டின்படி, காசா நகருக்குள் சுமார் 3,000 ஹமாஸ் போராளிகள் தங்கி உள்ளனர். இதனால், “ஹமாஸ் கோட்டை” எனக் கருதப்படும் பகுதிகளைச் சூழ்ந்தே தீவிர தரைவழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பாவி பொதுமக்கள் உயிர் பிழைக்க ஓர் இடைவெளி திறந்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரால் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தப்பிச் செல்லும் சூழலில், இஸ்ரேல் தற்காலிகமாக சில போக்குவரத்து பாதைகளை திறந்து வைத்துள்ளது.
- முதலில், கடலோர அல்-ரஷீத் சாலை வழியே பொதுமக்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன.
- இதையடுத்து, மாற்று வழியாக சலா அல்-தின் சாலை 48 மணி நேரத்திற்கு திறக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் பொதுமக்கள் நகரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காசா பகுதியில் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர், காசா நகரத்தில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய இறப்புகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு ஆண்டு போரில் பாலஸ்தீனிய இறப்பு எண்ணிக்கையை 65,000 ஐ தாண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் 48 மணி நேரத்திற்கு திறந்துள்ள இந்த சலா அல்-தின் சாலை, ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான உயிர்காக்கும் வழியாக மாறியுள்ள போதிலும், போர் நிற்காமல் நீடிக்கும் வரை அப்பாவி மக்கள் துயரம் தொடரும் என்பதில் மாற்றில்லை.