Tuesday, September 29பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஈரானிய விமானப் போக்குவரத்து மீதான அமெரிக்கக் கட்டுப்பாடுகள்:ICAO-விடம் ஈரான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது

நிறுத்திவைக்கப்பட்ட விமானப் போக்குவரத்து வழித்தடங்களை மீண்டும் தொடங்க ஈரான் முயன்று வரும் நிலையில், தனது விமானப் போக்குவரத்துத் துறை மீதான அமெரிக்கக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் (ICAO) ஈரான் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து தாக்கல் செய்யப்பட்ட இந்த எதிர்ப்புக் மனுவில், அமெரிக்கக் கட்டுப்பாடுகளால் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் அரசு ஊடகத்திடம் ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அபுசார் ஷிரூதி தெரிவித்தார். தடைகளை நீக்கி, முன்பு செயல்பாட்டில் இருந்த விமானப் போக்குவரத்து வழித்தடங்களை மீண்டும் தொடங்கக் கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான வழிகளையும் ஈரான் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். ஐரோப்பாவிற்கான நேரடி விமான சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டதால், பயணிகளுக்கான மாற்று ஏற்பாடாக இஸ்தான்புல் உள்ளிட்ட பிராந்திய விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் இணைப்புச் சேவைகளை ஈரான் நம்பியுள்ளது.

விமான நிலையங்கள், விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்குத் தொடர்ந்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பரிசீலனையில் உள்ள நிலையில், ICAO ஈரானுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளதாக ஷிரூதி தெரிவித்தார்.

ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய 27 ஈரானிய விமான நிறுவனங்கள் உட்பட 36 அமைப்புகள் மீது அமெரிக்கா இந்த மாதத்தின் 8-ஆம் தேதி பொருளாதாரத் தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், பணியாளர்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டு செல்ல ஈரான் தனது விமானப் போக்குவரத்துத் துறையைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, அதைத் தடுக்கும் நோக்கிலேயே ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast) என்ற பெயரிலான இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அமெரிக்கா கூறியது.

விமானப் போக்குவரத்துத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும், தனது விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கும் தடைகளை நீக்கவும் தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.