
இந்திய ரயில்வே துறை சார்பில், ரயில்வேயுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ‘ரயில் ஒன்’ (Rail One)‘ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பல்வேறு செயலிகளை தனித்தனியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நீங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை ரயிலில் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் எடுக்க, நடைமேடை சீட்டுகள் பெற மற்றும் உணவு புக்கிங் செய்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC), யு.டி.எஸ். (UTS) போன்ற தனித்தனி செயலிகளை பயணிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரே செயலியாக ‘ரயில் ஒன்‘ உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய செயலியின் வெளியீட்டு விழா, நேற்று டில்லியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘ரயில் ஒன்’ செயலியை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
“‘ரயில் ஒன்’ செயலியின் மூலம், பயணிகள் ரயில்வே சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும். டிக்கெட் முன்பதிவு, பயண நிலை கண்காணிப்பு, முன்பதிவு இல்லாத ஜெனரல் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதில் உள்ளன.”
மேலும், பயணத்தின் போது தேவையான உணவு மற்றும் பானங்களை முன்பதிவு செய்து ஆர்டர் செய்யும் வசதியும் இச்செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர, ரயில்வே உதவி எண்களுடன் நேரடி தொடர்பு கொள்ளும் வசதி, பார்சல் அனுப்பும் சேவைகள் குறித்த தகவல்களை அறியும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன பணிகள் இதில் இடம்பிடித்துள்ளன.
‘ரயில் ஒன்’ செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். (iOS) இயங்குதளங்களில் பயணிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் யு.டி.எஸ். செயலிகளை பயன்படுத்தி வரும் பயணிகள், தங்களது அத்தாட்சிப் பதிவுகளை அதேபோலவே இச்செயலியில் பதிவு செய்து புதிய செயலிக்கு மாறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ரயில்வே வாலட் (Railway Wallet) வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் நிர்வகிப்பு, முன்பதிவு கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் விரைவாக செய்யலாம். பல்வேறு செயலிகளை ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பயணிகள் இனிமேல் ஒரே செயலியின் மூலம் அனைத்து சேவைகளையும் எளிதாக அனுபவிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.