
நவீன போர்க்கால சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் நோக்குடன், இந்திய பாதுகாப்புப் படைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட, ‘பைரவ்’ என்ற புதிய சிறப்பு படைப்பிரிவை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த படைப்பிரிவின் முக்கிய தனிச்சிறப்பு, இதில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பதே ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, பாதுகாப்புத் துறையில் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. எதிர்கால போர்களில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற புரிதலின் அடிப்படையில், வீரர்களுக்கான பயிற்சி முறைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘பைரவ்’ சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படையில் இடம் பெற்றுள்ள வீரர்கள், காலாட் படைப்பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு நவீன போர்க்கள தேவைகளுக்கு ஏற்ப, எதிரி நிலைகளை துல்லியமாக கண்டறிதல், எல்லைக்குள் அதிவேகமாக ஊடுருவி தாக்குதல் நடத்தல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்திய ராணுவம் 15 ‘பைரவ்’ பட்டாலியன்களை உருவாக்கியுள்ளது. இவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில், ஏற்கனவே உள்ள பல்வேறு படைப்பிரிவுகளுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த பட்டாலியன்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்தும் திட்டமும் தயாராகி வருகிறது.
மேலும், ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனப் பகுதிகளில் நிலவும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள, ‘டெசர்ட் பைரவ் பட்டாலியன்’ என்ற தனிப்பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அந்தப் பகுதியின் நிலப்பரப்பு, வானிலை மற்றும் உள்ளூர் மொழி குறித்து நன்கு அறிந்தவர்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “பாலைவனத்தின் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, தொழில்நுட்பம் சார்ந்த தன்னிச்சையான செயல்பாடுகளை இந்தப் படை மேற்கொள்ளும்,” என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாதங்களாக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்ட இந்த வீரர்கள், ‘அகண்ட பிரஹார்’ என்ற கூட்டுப் பயிற்சியின் போது தங்களது திறன் மற்றும் வலிமையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ‘ருத்ரா பிரிகேட்கள்’ என்ற புதிய அமைப்பையும் இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இதில் காலாட் படை, பீரங்கி படை, நவீன இயந்திரமயமாக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் ‘ட்ரோன்’ பிரிவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும். இதன் மூலம், வேகமான முடிவெடுப்பு, துல்லியமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த போர்முறை செயல்பாடுகள் சாத்தியமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம், இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலிமையான, வேகமான மற்றும் தீர்க்கமான சக்தியாக உருவெடுத்து வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பைரவ் சிறப்பு படையின் முக்கிய அம்சங்கள்:
- படைப்பிரிவில் உள்ள அனைத்து வீரர்களும் ‘ட்ரோன்’ இயக்கம் மற்றும் அதன் மூலம் எதிரி நிலைகளை துல்லியமாக கண்டறிந்து தாக்குவதில் வல்லவர்கள்
- அதிவேகமாக செயல்பட்டு எதிரிகளின் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறன்
- பாரா சிறப்பு படை மற்றும் காலாட் படை பிரிவுகளுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பும் முக்கிய பாலமாக செயல்படும் அமைப்பு
- நவீன தொழில்நுட்ப காலத்துக்கு ஏற்ப தொடர்ச்சியான சிறப்பு பயிற்சிகள்
- எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் முழுமையான திறன் கொண்ட சிறப்பு படை
