Tuesday, October 14பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்தியாவில் இருந்து 5 மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மொபைல் போன் ஏற்றுமதி!

புதிய நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டுமே இந்தியா, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மத்திய வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, மொத்தம் 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான மொபைல் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தை விட 55 சதவீதம் அதிகம் ஆகும்.

மொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறுவதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடங்கியதிலிருந்து மொபைல் போன் ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது நாட்டின் மொத்த மொபைல் போன் ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையும், இதன் மூலம் இந்தியா உலகளவில் முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருவதாகவும், ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி டிம் குக் கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் மொபைல் உற்பத்தி துறைக்கு மத்திய அரசின் “மேக் இன் இந்தியா” திட்டமும், உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டங்களும் (PLI) வலுசேர்த்துள்ளன. இதனால் எதிர்வரும் மாதங்களில் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.