Wednesday, August 20பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மணல் மற்றும் கனிம வளக் கடத்தலில் பிடிபட்டால் இனி கிரிமினல் வழக்கு.

தமிழகத்தில் மணல், கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மாநில அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கனிம வளத் துறை தற்போது 3,741 வாகனங்கள் தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், குறிப்பாக மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மண்டலங்களில், தனியார் நிலங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கல் மற்றும் ஜல்லி எடுக்கும் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள், அனுமதி அளவை மீறி அதிக அளவில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதேபோல், ஆற்றுமணல், சவுடு, கிராவல் மண் போன்றவற்றையும் அனுமதியின்றி மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் பாயும் என தமிழக அரசு முன்னரே எச்சரித்திருந்தது. இந்நிலையில், 2025 பிப்ரவரி மாத இறுதி வரை நடைபெற்ற சோதனைகளில், 3,741 லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சட்டவிரோத கனிம வளக் கடத்தலில் ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளன. இவற்றில் பல வாகனங்கள் கூடுதல் பாரம் ஏற்றிச் சென்றதாக சாதாரண வழக்குகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில், பிடிபட்ட வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய கனிம வளத் துறை முடிவு செய்துள்ளது. “கனிம வளக் கடத்தலைத் தடுப்பதற்கும், சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கும், இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்” என கனிம வளத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.