
உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதாக அறிவித்ததையடுத்து, எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனைக் தொடர்ந்து, இந்தியா போன்ற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகள் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்குமா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உருவாகியுள்ளன. ஆனால், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவுக்கு இதனால் உடனடி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் எச்சரிக்கையும் அதன் தாக்கமும்
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி உற்பத்தி மையங்களை தாக்கியதையடுத்து, பதிலடி நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், உலக எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
இந்தியாவுக்கான சிக்கல்: எண்ணெய் வழித்தடம் அடைப்பா?
இந்தியாவின் எண்ணெய் தேவையில் 90% இறக்குமதியின் மீது தான் சார்ந்துள்ளது. இதில், சுமார் 40% எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் யூ ஏ இ ஆகியவற்றிலிருந்து வருகின்றன. இவை அனைத்தும் ஹோர்முஸ் நீரிணையை கடந்து தான் இந்தியா வந்தடைகின்றன. இதனால், அந்த வழி மூடப்பட்டால், இந்தியாவின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சவால் ஏற்படும் என கருதப்படுகிறது.
வழித்தட மாற்றம்
ஆனால், இந்தியா இந்த சிக்கலை முன்கூட்டியே கணித்துவிட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்யா, அமெரிக்கா போன்ற மாற்று நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து தினசரி 20 முதல் 22 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையின் 35% ஆகும். இதேபோல், அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி அதிகரிக்கப்பட்டு, மே மாதத்தில் 2.80 லட்சம் பீப்பாய்கள் இருந்த அளவு, ஜூனில் 4.39 லட்சம் பீப்பாய்கள் என உயர்ந்துள்ளது.
மாற்று கடல் வழிகள் மற்றும் அதிக செலவுகள்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும், எண்ணெய் கப்பல்கள் தற்போது சூயஸ் கால்வாய், ஆப்பிரிக்கா வழியாக கடல் பாதை, பசிபிக் பெருங்கடல் வழி, மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற பாதைகளில் கொண்டு வரப்படுகின்றன. இது அதிக செலவாக இருந்தாலும், இந்தியா தற்காலிகமாக இந்த வழிகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகிறது.
பெட்ரோலியத்துறை அமைச்சரின் உறுதி
இந்த சூழ்நிலையைப் பற்றி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், “இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் சூழ்நிலை தீவிரமாக இருந்தாலும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தில் சீர்கேடு இல்லை. தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும், இந்தியா தடுமாறவில்லை. அதற்குப் பின்னால் திட்டமிடப்பட்ட மாற்று உத்திகள், வணிக ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய துரித நடவடிக்கைகளே காரணம். எனவே, தற்போதைய நிலவரப்படி, பெட்ரோல், டீசல் விலை உயர்ச்சி அல்லது எண்ணெய் பற்றாக்குறை போன்ற அச்சங்களை தவிர்க்க இந்தியா வெற்றிகரமாக முன்னெச்சரிக்கைகள் எடுத்துள்ளது.