Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை மழை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டதாவது:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு பகுதிகளில் தலா 7 செ.மீ., சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் தென் மாவட்டங்கள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், பல இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • – புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று, நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • – தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
  • – மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.