
காசா பகுதியில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் நிலைமைக்கு முடிவு கட்டும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை ஒடுக்க இஸ்ரேல் தொடர்ந்து கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில், அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டிரம்ப்பை சந்தித்து, காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் சம்மதம் தெரிவித்தார்.
அந்த ஒப்பந்தம் பின்னர் ஹமாஸ் அமைப்பினரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஹமாஸ் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலின் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக தெரிகிறது. எனவே, காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். இது வெறும் காசா பிரச்சனை மட்டுமல்ல. மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் உத்தரவுக்குப் பின், காசா போர் நிறுத்தம் தொடர்பான சர்வதேச அரசியல் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் அமைதிக்கான எதிர்பார்ப்பில் உள்ளனர்.