Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

போலி குவான்டம் ஏ.ஐ. வீடியோவை நம்பி, முதலீடு செய்யாதீர்கள் – சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை

சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு வீடியோவில், “குவான்டம் ஏ.ஐ.” என்ற தொழில்நுட்பத்தில் மூலதனமாக ₹21,000 முதலீடு செய்தாலே, வாரத்திற்கு ₹4.55 லட்சம் லாபம் கிடைக்கும் என பரப்பப்படுகிறது. இதற்காக அதிக படிப்பு தேவை இல்லை என்றும், இந்தியர்கள் ஏற்கனவே பெரிதளவில் இதில் ஈடுபடத் தொடங்கி விட்டனர் என்றும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் பொய்யாக வடிவமைக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மேலும், இது முன்பெல்லாம் சிலருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு என்றும், தற்போது அரசு தளர்வுகள் வழங்கியிருப்பதால் யாரும் இதில் சேரலாம் எனவும் அதில் வலியுறுத்தப்படுகிறது. மேலும், “இம்மாதம் வரை மட்டுமே இந்த வாய்ப்பு இருக்கும்; இப்போது ‘லிங்க்’ கிளிக் செய்து முதலீடு செய்யுங்கள்” எனவும் அந்த வீடியோ ஊக்குவிக்கிறது.

இந்த வீடியோவில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தந்திரம் இது என்றும், இதுபோன்று ‘ஐ.ஏ.ஐ., குவான்டம் தொழில்நுட்பம், லாபகரமான முதலீடு’ எனக் கூறி வரும் போலி வீடியோக்களுக்கு வஞ்சிக்கப்படக்கூடாது எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறு கூகுள், யூடியூப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பரவும் போலி தகவல்கள், ஏமாற்ற முயற்சி மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டு, எந்த வகையான முதலீடும் மேற்கொள்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்தே செயல்பட வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். ஏதேனும் சந்தேகமிருந்தால் அருகிலுள்ள சைபர் கிரைம் பிரிவை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சிபிஐ மற்றும் மாநில போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணையத்தில் வரும் சோதனை செய்யப்படாத மூலதனச் சலுகைகள் பெரும்பாலும் மோசடிக்காரர்களின் வலையாகவே இருக்கும்.