
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த உர்சுலா வான் டெர் லேயன் 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். இதன்மூலம், அந்தப் பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். 2024ஆம் ஆண்டிலும் மீண்டும் இரண்டாவது முறையாக அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கடந்த கோடை காலத்திற்கு முன்னர் ஐரோப்பிய பார்லிமென்டில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அந்த சோதனையிலிருந்து உர்சுலா தப்பியிருந்தாலும், மிகக் குறுகிய காலத்திலேயே மீண்டும் அவரது பதவிக்கு எதிராக புதிய கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இடதுசாரி குழுவின் செய்தித் தொடர்பாளர் தாமஸ் ஷானன் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:
“உர்சுலா வான் டெர் லேயன் தலைமையிலான ஐரோப்பிய ஆணையத்தின் பணிகளுக்கு எதிராக இடதுசாரிகளும், ஐரோப்பாவுக்கான பல்வேறு பிரதிநிதிகள் குழுக்களும் இரண்டு தனித்தனி கண்டனத் தீர்மானங்களைத் தயாரித்து வருகின்றன. இத்தீர்மானங்கள் விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்,” என்றார்.
720 பார்லிமென்ட் உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய பார்லிமென்டில், குறைந்தபட்சம் 72 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் தான் தீர்மானம் விவாதத்திற்கு வரும். கையெழுத்துகள் சரிபார்க்கப்பட்டவுடன், பார்லிமென்ட் தலைவர் உடனடியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் முழுமையான விவாதமும் நடத்தப்பட வேண்டும்.
இந்தத் தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில், உர்சுலா வான் டெர் லேயன் பதவி விலக நேரிடும். இருப்பினும், அவர் உக்ரைன் போர், அமெரிக்காவுடனான உறவுகள், ஐரோப்பிய பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், கண்டனத் தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஜெர்மனி, உர்சுலாவின் தலைமையை வலுவாக ஆதரித்து வரும் நிலையில், எதிர்கால அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு அமையும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆர்வமுடன் கவனிக்கப்பட்டு வருகிறது.