பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரித்துவழங்கும் பணியை அமலாக்கத்துறை (ஈ.டி.) தொடங்கியுள்ளது.
2014 முதல் 2017 வரை, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி, 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினர். இதில், நிரவ் மோடி 2019 முதல் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹுல் சோக்சியின் இருப்பிடம் கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருவரையும் நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மெஹுல் சோக்சி மட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,097.63 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார். இதேபோல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் எடுத்த கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. அமலாக்கத்துறை இதற்காக வழக்கு பதிவு செய்து, நாடு முழுவதும் சோதனை நடத்தி, 597.75 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 1,968.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள், பங்குகள், நகைகள் உள்ளிட்டவை அடங்கும்.
மும்பை சிறப்பு நீதிமன்றம், இந்த சொத்துகளை மதிப்பிட்டு ஏலம் விட அனுமதியளிக்க, வங்கிகளுக்கும் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கும் உதவ அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து, இழப்புகளை ஈடுசெய்ய சொத்துகளை பணமாக்கும் பணியை தொடங்கியது.
மும்பை சிறப்பு நீதிமன்ற உத்தரவின் கீழ், மெஹுல் சோக்சியுடன் தொடர்புடைய 2,565.90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பணமாக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக, மும்பையில் உள்ள 125 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை பணமாக்கி, பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு வழங்கும் பணி அமலாக்கத்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.