Tuesday, July 8பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆன்லைன் நடைச்சீட்டு’ கட்டாயம் – கனிம வளத்துறை புதிய உத்தரவு

தமிழகத்தில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் நடைச்சீட்டு (Online Transit Pass) கட்டாயம் என கனிம வளத்துறை கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட தனியார் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெட்டப்படும் கருங்கற்கள், கிரஷர் ஆலைகள் மூலமாக நொறுக்கப்பட்டு ஜல்லியாகவும், அதேபோல் சுத்திகரிக்கப்பட்டு எம்-சாண்ட் (M-Sand) ஆகவும் தயாராகின்றன. இப்பொருட்கள் கட்டுமானத் தேவைகளுக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த வகையான கனிமங்களின் சுரங்க வேலைகளை கண்காணிக்க, இதுவரை ‘மேனுவல்’ முறையில் நடைச்சீட்டுகள் (Transit Passes) வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறையில் பல குறைகளை சந்தித்து வந்தது. குறிப்பாக, ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்தி அதிக அளவிலான கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் வழக்குகள் அதிகரித்தன.

இந்நிலையில், இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு ஆன்லைன் நடைச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நடைமுறையின் அடிப்படையில், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியாக ஆன்லைன் மூலம் நடைச்சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கனிம வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

“மேனுவல் நடைச்சீட்டு முறையை நிறுத்தியுள்ளோம். தற்போது, https://mimas.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவே ‘டிரான்சிட் பாஸ்’ வழங்கப்படுகின்றது. இதில் தனிநபர் மற்றும் நிறுவனமாக பதிவு செய்து தேவையான பாஸ்களை பெறலாம். இதற்காக குவாரி உரிமையாளர்கள், கிரஷர் மையங்கள், எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஆன்லைன் முறையை பயன்படுத்த வேண்டும்.”

இதனிடையே, மேனுவல் நடைச்சீட்டு முறையை திடீரென நிறுத்தியதால், கடந்த வாரம் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இது கட்டுமானத் துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆன்லைன் நடைச்சீட்டு முறை முற்றிலும் செயல்பாட்டுக்கு வந்தவுடன், விநியோகத்தில் ஏற்படும் தடைகள் நீங்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆன்லைன் பாஸ் இல்லாமல் ஜல்லி அல்லது எம்-சாண்ட் எடுத்துச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும். அதனை மேற்கொண்டவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என கனிம வளத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலைமை குறித்து மாவட்ட அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.