
பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு மற்றும் பிரிவினை உருவாகாமல் தடுக்கும் நோக்கில், ஜாதி சார்ந்த பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை:
மாணவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கவும், ஜாதி மோதல்களைத் தவிர்க்கவும், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு கடந்த ஜூன் 18ஆம் தேதி அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில், பள்ளிகளில் சமத்துவச் சூழல் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், ஜாதி அடிப்படையிலான பிரிவினை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவு:
அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில்:
- – பள்ளிகளில் ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடம் விதித்து, பிரிவினை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் குறித்த புகார் வந்தால், அவர்களை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
- – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை தொடர்பான விபரங்கள் தேவைப்பட்டால், அந்த மாணவர்களை தனிப்பட்ட முறையில் தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு அழைத்து பேச வேண்டும். இந்த விவரங்களை பொதுமக்கள் முன் பகிரக்கூடாது.
- – மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரக்கூடாது. இதுகுறித்து அவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.
- மாணவர்களின் பிரச்சினைகள், தொந்தரவுகள் குறித்து அவர்கள் வெளிப்படையாக புகார் அளிக்க ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி ஒவ்வொரு பள்ளியிலும் வைக்கப்பட வேண்டும். அதை வாரம் ஒரு முறை தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, புகார்களை ஆலோசனைக் குழு மூலம் பரிசீலிக்க வேண்டும். அதன்பின், முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வித் துறையின் முக்கிய எச்சரிக்கை:
இந்த உத்தரவு, பள்ளிகளில் சமத்துவச் சூழலை உறுதிப்படுத்தவும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கவும் முக்கியமாக அமையும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.