
இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பின்படி, ஜூலை 1, 2025 முதல் நாடு முழுவதும் ரயில் பயணத்துக்கான கட்டணங்கள் சில பிரிவுகளில் உயர்த்தப்படவுள்ளன.
500 கி.மீ.க்கு கீழ் பயணிக்கும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் 500 கி.மீ.க்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இது வழக்கமான பயணிகளை மிகுந்த அளவில் பாதிக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
500 கி.மீ.க்கு மேல் ‘ஏசி அல்லாத எக்ஸ்பிரஸ்’ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 1 கி.மீ.க்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். உதாரணமாக, 1,000 கி.மீ. பயணிக்கும் ஒருவரின் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் அதிகரிக்கிறது.
ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, 500 கி.மீ.க்கு மேலான பயணங்களில் 1 கி.மீ.க்கு 2 பைசா வீதம் கட்டணம் அதிகரிக்கப்படும். இது ஏசி பயணிகளுக்கு சிறிய அளவிலான விலையுயர்வாகவே அமையும்.
தினமும் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளின் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த கட்டண உயர்வு மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், பயணிகள் மீது அதிக சுமை ஏற்படாது என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரயில்வே வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், பாரத ரயிலின் பணிச்சுமையை சமன் செய்யவும் இந்த கட்டண மாற்றம் அவசியமாகி உள்ளதாகவும் கூறப்பட்டது.