
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதலே வானம் கருமேகங்களால் சூழப்பட்டு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த இந்த மழையால் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.
பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின:
நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் இயங்குவதற்கு சிரமம் ஏற்பட்டது.
மழை அளவுகள்:
துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடையாறு பகுதியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனால், பல குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான சாலைகள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
வானிலை மையம் அறிவிப்பு:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மழை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலை:
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.